Sunday, April 15, 2018

திருமணம் எப்படி நடக்க வேண்டும்

திருமணம்:

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

அருகு-மணை எடுத்தல்:

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும். பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர். ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

பிள்ளையார் வழிபாடு:

மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

முகூர்த்தக்கால் நடுதல்:

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றி செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:

அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்

No comments:

Post a Comment