Friday, October 25, 2019

ஶ்ரீ மகாலட்சுமி தாயாரின் வழிபாடு முறையும் பலன்களும்

ஶ்ரீ மகாலட்சுமி தாயாரின் வழிபாடு முறையும் பலன்களும்

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.

21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.

22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.

23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.

26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.

28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.

34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.

36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.

38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.

39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.

40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.

42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.

47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.

48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.

49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.

50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது

Thursday, October 17, 2019

பித்ரு கடன்

ஸ்வாமி பிதுர்தர்பணம் செய்ய முடியாமல் செய்யாமல் பலர் நம் ஶ்ரீவைணவத்தில் உள்ளனர் அவர்கள் நல்ல பணமுடையவர்களாக வீடு வாசல் என நலமாக உள்ளனர் ஆனால் பிதுர் தர்ப்பணம் செய்யும் பலர் பரம ஏழையாகவோ அல்லது நடுத்தரமானவராகவோ தானே உள்ளனர் இப்படியிருக்க பிதுர் தர்ப்பணம் அவசியமா?

அடியேன் தாஸன்

கேள்வி சரியானதாக தெரிந்தாலும் அடியேன் சொல்வது ஒன்று உண்டு அதற்க்கு முன் ஒரு சிறு விளக்கம்

ஸ்ரீபித்ரு தேவதாப்யோ நமோ நம:

பெற்றோர்களை நாம் அவர்களின் வயதான காலத்தில் காப்பதற்கு பெயர் கடமை அதையே அவர்கள் காலமானவுடன் அவர்களுக்கு நாம் செய்வதற்கு பெயர் கடன் அதாவது
பித்ரு கடன்

பிதுர் கடனை நாம் முறையாக செலுத்தவில்லை என்றால் எப்படி நாம் வங்கியில் அல்லது வெளியில் ஒருவரிடம் கடன் வாங்கிய பின் பணத்த்தை கட்ட மறந்து இறந்து போனால் அது எப்படி வட்டி மேல் வட்டியாக சேர்ந்து நம் சந்ததிகள் தலையில் விழுமோ

அது போல் பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கர்மாக்கள்தான் பெற்றவர்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிகடன் அதுவே தான் நம் சந்ததியருக்கு நாம் கொடுத்து செல்லும் பிக்ஸட் டெபாஸிட் போல் அதை செய்ய மறந்தால் மறுத்தால் அதனால் பாதிக்கப்பட போவதும் குழந்தைகளே சந்ததிகளே

பித்ருக்களுக்கு ஓரு வருடத்திற்கு தொன்னூற்றாரு நாட்கள் பசியெடுக்கும் நாட்கள் ஆகையால் ஓரு வருடத்திற்கு தொன்னூற்றாறு நாட்கள்  தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது அதற்கு ஷண்ணவதி சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் என்று பெயர்

நம்மில் பலர் பழக்கத்தின் காரணமாக பன்னிரண்டுமாத தர்ப்பணங்கள் வழக்கமில்லை வருடத்தில் நான்கு  மாதம் தான் தர்ப்பணம் வழக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் தவறில்லை புரிதலில் வந்ததவறு

பொதுவாக இன்றய காலகட்டத்தில் இல்லத்திலோ கல்யாணம் மற்றும் விசேட நாட்களில் பலர் சாப்பிடும் விஷயத்தில்  வழக்கமில்லாததை எல்லாம் செய்து சாப்பிடுவதை காண்கிறோம்

நம்மை பகவத் கிருபையால் பெற்று வளர்த்து இன்று நாம் வாழும் வாழ்க்கை மற்றும் சாப்பாட்டிற்கு மூலகாரணமான இருந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதில் மட்டும் பலவற்றை வழக்கம் இல்லை என்று ஏன் வைத்துள்ளார்கள்  என்று தெரியவில்லை

பிரதி வருடம் நம்முடைய தாய் தந்தை சிரார்த்த திதியன்று ஏதோ ஒரு வகையில் சிரார்த்தம் செய்யாமல் கோயிலிலோ மடத்திலோ ஏதாவது ஒரு அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் போன்றவைகளில் சிறப்பாக பணத்தைக்கட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் அந்த காரியம் அன்னதானம் என்ற புண்ணியம் அக்கௌன்டிற்கு போகுமே தவிர பித்ருக்களின் சிரார்த்த அக்கௌன்டிற்கு போகாது

இன்னும் சொல்ல போனால் சிரார்த்தத்திற்கு ஒரு பதினைந்து நாட்கள் முன்பே நம் பித்ருக்கள் நம் இல்லத்திற்க்கு வந்துவிடுவதால் அந்த பித்ரு பஷத்தில் கூடுமானவரை
சிரார்த்தம் முடிந்த மறுநாள் வரை வீட்டில் சிரார்த்த கறிகாய்களே தளிகையில் சேர்க்க வேண்டும்

வெங்காயம் பூண்டு முருங்கை கத்திரி முதலிவைகளை தளிகையில் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் 

இன்னும் சொல்லப்போனால் முகசவரம் கூட செய்துகொள்ள கூடாது காரணம் அதற்கு பித்ருதீஷை என்றுபெயர்

சிரார்தங்களை முறையாக செய்வதன் மூலம் செய்பவரின் குடும்பத்திற்க்கு அவர்களின் பித்ருக்கள் ப்ரீதியடைந்து மனம் குளிர்ந்து அனுக்ரஹம் செய்வார்கள் குடும்பத்தில் கூடுமானவரை ஒரு குறையும் இருக்காது

இப்போது தேவரின் கேள்விக்கு வருகிறேன்

தர்ப்பணம் சிரார்த்தம் என முறையாக செய்யாதவர்களிடம் பணம் வசதி இருக்கலாம் அது அவர்களது தாத்தா இவர்களுக்கு செய்த சொத்து அதே நேரம் இவர்களது செயல்களின் தாக்கத்தால்

அவர்கள் வீட்டில் அமைதி இராது ஒன்று குழந்தைகள் இராது குழந்தைகள் இருந்தாலும் சண்டை மணவாழ்க்கையில் பிரச்சனை ஏன் பல வீடுகளில் குழந்தைகள் டைவர்ஸ் அல்லது மனப்பிறழ்வு கருக்கலைப்பு பதவியில் பிரச்சனை என்றோ ஏற்பட்டு அல்லது

பணம் இருந்தும் ஒழுங்காக உண்ண உறங்காமுடியாமல் பல விதமான மன உலைச்சல்களில் நிம்மதி இன்றி வெளியில் மட்டும் சிரித்தவாறே இருப்பர்

பணம் வசதி என பார்த்தால் அது புண்பட்ட உடலில் போட்ட சட்டை போல் ஆனால் உடலில் உள்ள புண்ணின் எரிச்சல் பாதிப்பு அதை அனுபவிக்கும் பாதிக்க பட்டவனுக்கு
மட்டுமே தெரியும் பார்பபவனுக்கு தெரியாது ( இதை தான் பட்டால் தான் தெரியும் பாப்பானுக்கு ( அதாவது பார்க்கிறவனுக்கு) என நம்மை பற்றி தவறாக கூற பயன்படுத்துகின்றனர்)

நாம் செய்யும் தவறு நம் சந்ததிகளை பேரன் பேத்திகளை ( அந்த பாக்கியம் கிடைத்தால்) மிகவும் பாதிக்கும்  அல்லது குடும்பத்தில் பெண்களை பிள்ளைகளை அமைதியாக வாழவிடாது என்னதான் பணம் வசதி இருந்தாலும்

ஏன் இதெல்லாம் செய்பவர்களுக்கு வரதா என்றால் கூடுமானவரை வராது இன்று நம்மில் பலர் குழந்தை பருவத்தில் கஷ்டபட்டவர்களாக இருந்தாலும் இன்று நல்ல நிலைமையில் இருக்க காரணம் சென்ற தலைமுறையினர் தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற காரியங்களை முறையாக செய்ததன் பலன் நாம் இன்று கல்வி நல்லவேலை வசதி என வாழ்கிறோம் இது நிரந்தரமாக நம் குடும்பத்தில் தங்கி இருக்க வேண்டுமானால் நாமும் பிதுர்கர்மா தர்ப்பணம் சிரார்தம் முதலியன செய்யனும்

பலர் பிறவியிலேயே வசதியாக பிறந்தும் தற்சமயம் பசிக்கு உணவு கிட்டாமல் சிரம்ப்படுவதும் முன்னோர் செய்ய தவறிய கடன்களின் பாதிப்பே

நாம் செய்யும் தவறு பேரன் பேத்திகளை அல்லது குழந்தைகளை பாதிக்கும் போது பரிகாரம் என பணத்தை கொட்டி கொடுத்தாலும் சரியாகாது

பகவத் கடன் செலுத்தவில்லை என்றால் பரவாயில்லை காரணம் பகவான் நம்மை வெறும் கையுடன் தான் ( கர்மாவை நாமே கொண்டுவருகிறோம்) அனுப்புகிறான் வெறும் கையுடன் தான் கூட்டி செல்கிறான்

ஆனால் இன்று நம்மை பெற்றவர்களுக்கு செய்ய தவறிய கர்மா இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறவியிலும் நம் கூட வந்தே நம்மை படுத்தும் ( அடுத்த பிறவியை பற்றி இப்பவே ஏன் கவலைப்படும் இருப்பதை அனுபவிப்போம் என்பவர்களை பற்றி அடியேன் ஒன்றும் சொல்ல முடியாது)

உறுதியாக சொல்லுகிறேன் நாம் ( பிராமணர்கள்) பலவிதங்களில் நம் முன்னோர்கள் கடைபிடித்த பல தினசரி பகவத் பாகவத ஆசாரிய பிதுர் கடமைகளை முறையாக செய்யாததே இன்றய பருவகால மாற்றத்துக்கு மூலகாரணம்

பணம் வசதி மட்டும் ஒரு சிறந்த வாழ்க்கையல்ல ஒரு சுனாமி ஒரு புயல் வெள்ளம் போதும் அந்த நிலமையே மாறிவிடும்

பிதுர் காரியம் பகவத் பாகவத ஆராதனம் செய்பவர்களை அப்போதும் அவர்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்

கடமையை செய் என்பது தான். பகவான் கூற்று பலன் அவனிஷ்டம்

எனவே செய்யுங்கள் கேள்வி வேண்டாம்

Wednesday, October 2, 2019

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்:

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்:

முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது.

அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும். ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்...

1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.

மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.

இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.

மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.

அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.

2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்!

பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.
எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள்.
தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம்.

விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.

3. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.

பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது.

சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.

4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.

மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி.
வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.

அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.

5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா…அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.

இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு.

அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.

6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்!

நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும்.
நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.

7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.

உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது.

இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம்.

அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.

8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.

நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது.

எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.

9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது.

பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை.

அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு.

மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்