Thursday, November 15, 2018

இறைவனை வழிபாடு செய்யும் வழிமுறைகள்

ஒருவர் ஆலயம் சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகையிலான வழிமுறைகளை நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த வழியில் சென்று இறைவனை வழிபட வேண்டும். அப்போது இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும். அது சரி... அது என்ன ஒன்பது வழிமுறைகள்... வாருங்கள்.. தெரிந்து கொள்வோம்.

*கேட்டல்*

இந்த வழிபாட்டு முறைக்கு நாம் எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ‘கற்றிலன் ஆயினும் கேட்க..’ என்றும், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்றும் திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினாலே போதுமானது. இறைவனைப் பற்றிய பெருமைகளையும், புகழையும் கேட்டு, அவன் வசம் ஆகும் முறையே இந்த ‘கேட்டல்’ வழிபாட்டு முறை. ஆகையால் இறை வனைப் பற்றி பலவற்றையும் அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும். கேட்பது என்பது எளிது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஒருவர் சொல்வதை பொறுமையாக, தெளிவாக கேட்டு அறிந்து கொள்வதற்கும் மனம் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக அறிந்தவர்கள் சொல்லும் நல்லதைக் கேட்க முயற்சிக்க வேண்டும். அதனால் தான் வழிபாட்டு முறைகளில், ‘கேட்டல்’ முதலிடம் பெறுகிறது.

*பாடுதல்*

கேட்டல் வழிபாட்டிற்கு அடுத்தபடியாக இருப்பது, இறைவனைப் பாடி வழிபடும் முறை. இறைவனைப் பாடி வழிபடுதல் அடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ‘பாடும் பணியில் என்னை பணித்தருள்வாய்’ என்கிறார் குமரகுருபர சுவாமிகள். அந்த அளவுக்கு இறைவனை பாடும் வழிபாட்டு முறை சக்தி மிக்கதாக இருக்கிறது. இசையால் இறைவனை ஈர்த்து, அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டில் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். அப்படி தங்களின் பாடலால், இறைவனை தன் வசம் ஈர்த்தவர்களில் நால்வர் எனப்படும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் மிகப்பெரிய சக்தி உண்டு. அப்படிப்பட்ட பாடலின் வாயிலாக நாமும் இறைவனைப் பாடி அவனருளைப் பெறுவோம்.

*நினைத்தல்*

இறை வழிபாட்டில் மூன்றாவது நிலை, ‘நினைத்தல்’. இறை சிந்தனையில் மூழ்குவது என்பது நினைக்கும் போது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு விஷயத்தை நினைக்கும் போது, ஓராயிரம் சிந்தனைகள் வந்து, முதலில் நினைத்ததை புறந்தள்ளி விட்டு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவதே பெரிய விஷயம்தான். அப்படி இருக்கையில் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும், மனதின் உள்ளே இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது என்பது மேலான ஒரு நிலைதானே. மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான ஒரு வழிபாட்டு முறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

*திருவடிதொழல்*

இந்த வழிபாட்டு முறையைப் பற்றி, திருவள்ளுவரும் அழகாக சொல்லியிருக்கிறார். ‘அறமாக விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்கு பவர்களைத் தவிர, மற்றவர்களால் பொருள், இன்பம் என்னும் பிறவிப்பெருங்கடலைக் கடக்க முடியாது’ என்பது வள்ளுவனின் வாக்கு. ஆம்.. நாம் கடந்து போக வேண்டிய இன்ப துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக் கடலில், நம்மை மூழ்கவிடாமல் காப்பது இறைவனின் திருவடித்தொழுதல் மட்டும் தான். ஆகையால் திருவடிதொழல் என்னும் வழிபாட்டு முறை முக்கியத்துவம் பெறுகிறது. எந்த நிலையில் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தபோதிலும் இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்கள் இதற்குச் சான்றாக விளங்குகிறார்கள்.

*பூஜித்தல்*

ஐந்தாவது வழிபாட்டு முறையாக இருக்கிறது இறைவனை பூஜை, நைவேத்தியம் செய்து வழிபடும் முறை. இப்படித்தான் இறைவனை பூஜித்து வழிபட வேண்டும் என்று ஆகம விதிகளும், வழிபாட்டு முறைகளையும் வகுத்து வைத்திருந்தாலும், எப்படி பூஜித்தாலும் அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவன் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வான் என்பது ஆன்மிகப் பாதையில் கரைகண்டவர்கள் சொல்லும் உண்மை.

அதற்கு சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் இருக்கும் உதாரணம் தான் கண்ணப்ப நாயனார். ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தவர்கள் மத்தியில், இறைவன் மேலான அன்பால் அவருக்கு பன்றி இறைச்சியையும், தன் கண்ணையும் கொடுத்ததின் மூலமாக இறைவனை பூஜிப்பதற்கு அன்பு ஒன்றே போதும் என்று நிரூபணம் செய்தவர்.

*வணங்குதல்*

இறைவனை வழிபடுவதில் அடுத்த கட்டம் இது. பொதுவாக பலரும் பூஜித்தல், வணங்குதல், திருவடிதொழல் ஆகிய மூன்று வழிபாட்டுக்கும் பெரிய வித்தியாசம் என்ன இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் இருக்கிறது. இவை மூன்றுக்கும் மிக நுண்ணிய நூலிழை வித்தியாசமே உண்டு. இங்கு நாம் பார்க்கும் ‘வணங்குதல்’ என்ற வழிபாட்டு முறையை ‘தலைவணங்குதல்’ என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

திருவடிதொழல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குதலில் அகங்காரத்தை களைவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ‘நான்’ என்ற ஆணவம் தான் அனைத்துக்கும் மூலகாரணம். அந்த ‘நான்’ என்ற அகந்தையை ஒழித்து, ‘எல்லாம் நீ’ என்ற பணிவுடன் இறைவனை தலைவணங்கும் முறை இது. ‘நான்’ என்னும் அகங்காரத்தை கைவிட்டால் ஒழிய, இறைவனின் அருள் நமக்கு கிடைக்க வழியே இல்லை என்பதைச் சொல்வதே இந்த வழிபாட்டின் சிறப்பம்சம்.

*தொண்டு*

தன்னலம் கருதாது, புகழுக்காகவும், லாபத்திற்காகவும் அல்லாது, இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இயலாதவர்களுக்கும் தொண்டு செய்வதும் கூட இறைவனை வழிபடும் ஒரு மார்க்கமாகவே பார்க்கப்படுகிறது. தன்னலமற்ற தொண்டுக்கு சிறந்த உதாரணமாக ஆன்மிக மார்க்கமாக தொண்டாற்றிய திருநாவுக்கரசரையும், சமூக மார்க்கமாக தொண்டாற்றிய அன்னை தெரசாவையும் குறிப்பிடலாம். தள்ளாத வயதிலும் கூட கோவில்கள் தோறும் சென்று தொண்டு புரிந்தவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசர். அதே போல் கொல்கத்தா வீதிகளில் அவதிப்பட்ட தொழு நோயாளிகளுக்கெல்லாம் சேவை செய்து மகிழ்ந்தவர் அன்னை தெரசா. இறைவனை மகிழ்விக்க இதுபோன்ற சேவைகளைவிட உயர்வானது எதுவும் இல்லை.

*சிநேகம்*

இறைவனை சிநேகத்துடனும், அன்பாகவும் பார்க்க முடிவது ஆன்மிகத்தின் தனிச்சிறப்பு தன்மையாகவே சொல்லலாம். அன்பும், காதலும் இறைவன் மீது ஏற் படுவது ஒரு வித வழிபாடாகவே கருதப்படுகிறது. மீரா, ராதை போன்றவர்கள் இந்த அன்பின் எல்லையால் இறைவனை கட்டிப்போட்டவர்கள். அதைத் தான் ‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’ என்கிறார் வள்ளலார் என்னும் ராமலிங்க அடிகளார். இறைவன் என்னும் மலையை எப்படி அன்பு என்னும் பிடியில் கட்டுவது? அது கற்பனை என்று தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறது இந்த வழிபாட்டு முறை.

*ஒப்படைத்தல்*

கடைசி வழிபாட்டு முறை இது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்வது இதன் சிறப்பம்சம். இது மகான்களால் மட்டுமே ஆகிற காரியம் என்றாலும், ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக்கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வுநிலை.

இறைவனை அடையவும், அவனது பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது வழிபாட்டு முறைகளும் உங்களுக்கு உதவும். இதில் அவரவரர் இயல்புக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அதைக் கடைப்பிடிக்கலாம்.

Saturday, September 22, 2018

யாத்ரா தானம்

யாத்ரா தானம்

யாத்ரா தானம் என்றால் என்ன?எப்படி வந்தது?செய்தால் என்ன  நன்மை-- ஒரு விளக்கம்

யாத்ராதானம் என்றால்என்ன?

ஒருயாத்திரை வெளியூர் பயணமோ  அல்லது ஷேத்திராடனமோ/கல்யாண மண்டபமோ/செல்லும் முன் செய்யும் தானம் தான் யாத்ராதானம் என்பது

யாத்ரா தானம் எப்படி வந்தது?

வால்மீகியின் இராமாயண காவியத்தில் ஒரு அருமையான சம்பவம் ஒன்று விளக்கப் பட்டிருக்கும். அது வெறும் சம்பவம் மட்டுமல்ல  அது பல துன்பங்களிருந்து விடுபட சிறந்த பரிகாரமாகவும் உள்ள ஒன்று. அதுதான் யாத்ரா தானம் என்பது.

அதாவது ஸ்ரீ ராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம் செல்ல தயாராகி விட்டார். தான் சேர்த்த பொருளை எல்லாம் யாத்ரா தானமாக கொடுக்க முடிவு செய்தார். அது முதல் வந்தது தான் யாத்ராதானம்

யாத்ராதானம் செய்வதால் என்ன  நன்மை?

ஸ்ரீ ராமபிரான் அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட சேர்த்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர்.

தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும் ஒரு அந்தணன் வந்தான். அவன் பெயர் திரிசடன். வயது முதிர்ந்தவன். அவனுக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை பொருக்கி அதிலே ஜீவனம் செய்துவந்தான். கொடிய வறுமை.

இவன் இவ்வாறு வறுமையில் வாடிக் கொண்டிருக்க ராமபிரான் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவனது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று அன்பரே எவ்வளவு நாள்தான் இந்த வறுமை யை சகித்துக் கொள்வது.

ராமர் கானகம் ஏகும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார், நீங்களும் இந்த மண்வெட்டி கோடாலியை எல்லாம் அப்பாலில் வைத்துவிட்டு அவரை சென்றடைந்து நமது நிலையை எடுத்துசொல்லி ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள் நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார் ஆகவே சென்று வாருங்கள் என்றாள்.

அதற்கு அந்தணனும் ஒப்புக் கொண்டு தன்னுடைய கந்தல் ஆடையால் உடலை ஓரளவு மறைத்துக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான்.

அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த ராமபிரானை கண்டார். ராமரை பணிந்து, ஹே அரசகுமாரரே ! தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது.

நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறோம். உண்ண உணவில்லை, உடுக்க உடை இல்லை. வயல் வரப்பில் தானே விழும் நெல்லை பொறுக்கி அதைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். என்பால் கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான்.

ராமபிரான், "அன்பரே சற்று முன் வந்திருக்க கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக் கும் கொடுத்து விட்டேனே! தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என வினவ

நூறா இருநூறா அல்லது அதற்கும் மேலும் கேட்பதா என அந்தணன் திகைத்தான். பிறகு ஒரு வழியாக புத்திசாலிதனமாக என் வறுமை தீரும் அளவிற்கு வேண்டும் என்று ராமபிரானின் விருப்பத்திற்கு விட்டு விட்டான்.

அண்ணலும் "அந்தணரே உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள் அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது வரை உள்ள பசுக்களை உமதாக்கிக் கொள்ளலாம்" என்றார்.

இதை கேட்ட அந்தணன் விழிகள் மலர்ந்தன.

நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான்.

தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான்.

தனது முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது.

அவனுடைய பேராசையை எண்ணி சிரித்துக் கொண்டார் பொரு ளாசை தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? அதே சமயம் சக்தியற்ற மனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாக மாற்றுகிறது என்பதை தெரிந்துக் கொண் டார்.

உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார்.

அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான்.யாத்திரை  இனிதே முடியவாழ்த்தினான்.

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு ராமபிரான் வழங்கிய பசு கூட்டங்களுடன் தனது வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் வறுமையின்றி சுகமாக வாழ்ந்தான்.

இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் வெளியூர் பயணமோ,ஷேத்திராடனமோ,கல்யாண மண்டபமோ, அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை, பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை மேற்கொள்வார்கள்

அதனால் யாதொரு கஷ்டமும் இன்றி பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்புவர்.

நாமும் நல்ல காரியங்களுக்கு வெளியூர் பயணங்களுக்கு செல்லும் முன் யாத்ரா தானம் செய்து விட்டு செல்வோம்

யாத்ரா செல்லும்முன் சொல்ல வேண்டியஸ்லோகம்

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ...

Sunday, July 1, 2018

பிரதோஷம் என்றால் என்ன

பிரதோஷம் என்றால் என்ன?

  தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, தன்வந்தரிபகவான் அமுதத்தை (முப்பு)தந்தார் முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திரன் மற்றும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால்  ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் எனப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவாலையம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிட்டும்.

அனைத்து பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவும் கிருஷ்ணபட்சத்தில் சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும்.

கிருஷ்ணபட்சத்தில் வரும் சனிப் பிரதோஷத்தன்று வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிட்டும்.

Thursday, May 3, 2018

தரிசனம்...எப்படி அமைய வேண்டும் !

தரிசனம்...எப்படி அமைய வேண்டும் !

கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தக் கண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள்.

இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.

ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென #அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம்.

எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.

உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள்.

இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு,

கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள்.

அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு.
எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.

ஓம் நமசிவாய !

Sunday, April 15, 2018

திருமணம் எப்படி நடக்க வேண்டும்

திருமணம்:

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

அருகு-மணை எடுத்தல்:

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும். பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர். ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

பிள்ளையார் வழிபாடு:

மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

முகூர்த்தக்கால் நடுதல்:

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றி செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:

அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்